தலல்ல கடற்கரையில் 561 கிலோ கிராமிற்கும் அதிகளவான போதைப்பொருள் மீட்பு
மாத்தறை, தலல்ல, நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பிரதேசத்தில் இன்று (24) முற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களின் நிறை 561 கிலோகிராம் 705 கிராம்கள் என பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அதில் 321 கிலோ 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 239 கிலோ 764 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் 10 சாக்குப்பைகளும், 11 பயணப் பைகளும் மற்றும் குறித்த போதைப்பொருள் தொகையைக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டன.
இதுவே கடற்படையினரால் இந்த ஆண்டில் கரையில் வைத்துக் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகும் என்பதுடன், இவை பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான 'தெஹிபாலே' என்பவருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.