பிரித்தானியாவில் 1,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் திடீர் இரத்து; பயணிகள் பெரும் அவதி!
பிரித்தானியாவின் தேசிய விமானச் செயலாக்க அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தானியங்கி விமானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15-க்கும் மேற்பட்ட பிரித்தானிய விமான நிலையங்களில் 1,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம்
தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்னும் நீடிப்பதால் பல விமான நிலையங்களில் பெரும் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்த திடீர் விமான இரத்துகள் மற்றும் தாமதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களிலும், ஓடுதளங்களில் நிறுத்தப்பட்டுள்ள விமானங்களுக்குள்ளும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஏர்வேஸ் 100-க்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை இரத்து செய்ய அல்லது மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பிவிட வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது.
அதேவேளை, ரையான்ஏர் நிறுவனத்தின் 50-க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதால், சுமார் 65,000-க்கும் அதிகமான பயணிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஐரோப்பா முழுவதும் விமானச் சேவைகளில் குறிப்பிடத்தக்க தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது. அத்துடன் ஹீத்ரோ, ஸ்டான்ஸ்டெட், இலண்டன் சிட்டி, மான்செஸ்டர், பர்மிங்ஹாம் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களிலும், ஸ்காட்லாந்தின் சில விமான நிலையங்களிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் விமானப் பயண அட்டவணைகள் மாற்றமடைந்துள்ள நிலையில், பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.