மாணவர்களிடையே பரவும் நோய் ; பாடசாலைகளுக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு
தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் 'எண்டிரோவைரஸ் மெனிஞ்சைடிஸ்' நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுடன் இணைந்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளது.
இந்த நோய் முக்கியமாக சிறுவர்களையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களையும் அதிகமாகப் பாதிப்பதாக அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்
அத்துடன், இந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் கண்டறியப்பட்டிருந்தனர்.
மேலும், தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் பரவியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுநோயியல் மற்றும் சுற்றுச்சூழல் விசாரணைகளின்படி, ஆங்காங்கேயும் மற்றும் கொத்தணிகளாகவும் இந்நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், இவர்களில் பாடசாலை மாணவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டுமாறு அறிவுறுத்தி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.