மீண்டும் நாட்டை இருளுக்குள் தள்ள முயற்சிக்கும் எதிரணிகள்! அமைச்சர் சாடல்
இலங்கை தற்போதுதான் இருளிலிருந்து ஒளியை நோக்கி பயணிக்கின்றது. இந்த நிலையில் போராட்டங்களை நடத்தி நாட்டை மீண்டும் இருளுக்குள் தள்ளுவதற்கு எதிரணிகள் முயற்சிக்கின்றன என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நாளை (02-11-2022) நடைபெறும் போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
”நெருக்கடியான சூழ்நிலையில்தான் நாம் ஆட்சியை பொறுப்பேற்றோம். வரிசைகளில் நின்று மக்கள் இறந்தனர். விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்தன. பாண் விலை 1000 ரூபாவாகுமா என்ற அச்சம்கூட ஏற்பட்டது.
ஆனால் வரிசை யுகம் தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன.
இப்படி நாட்டை மீட்பதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவரும் நிலையில், அதனை குழப்பும் நோக்கிலேயே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே, நாடு மீண்டும் விழுந்தால், சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தால் அதற்கு சஜித்தான் பொறுப்பு கூறவேண்டிவரும்.” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.