எதிரிகள் தொல்லை அதிகமா உப்பு பிள்ளையார் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்
பிள்ளையார் வழிபாடு பொதுவாக வெற்றியை தரக்கூடியதாக இருக்கிறது. வெற்றி தரும் இந்த பிள்ளையாரை பல பொருட்களை கொண்டு ஆவாஹனம் செய்து வழிபடப்படுவது வழக்கமாக இருக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு விசேஷங்களிலும் முதன்மையாக மஞ்சளை கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவது வழக்கம்.

பிள்ளையாரை வழிபட்டு தான் மற்ற பூஜைகளை துவங்க வேண்டும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அப்படி துவங்கினால் தான் அந்த பூஜை முழுமை பெறுவதாக அர்த்தம் ஆகிறது.
சங்கடஹர சதுர்த்தி
ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து சங்கடங்களும் தீரும் என்று நம்படுகிறது.
இதை கோவிலுக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை வீட்டிலேயே பிள்ளையாரை பிடித்து வைத்து எளிமையான முறையிலும் நாம் வழிபட்டு அதற்குரிய பலன்களை பெற்று விடலாம்.

உப்பு பிள்ளையார் வழிபாடு
எதிரிகள், பகைவர்கள், துரோகிகள், நம்முடைய நம்பிக்கையை உடைத்தவர்கள், நமக்கு எதிராக செயல்படுபவர்கள் சூழ்ச்சி புரிபவர்களை எதிர்க்கவும் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத மறைமுக எதிரிகளை கூட துவம்சம் செய்யவும் உப்பு பிள்ளையார் வழிபாடு எளிய வழிப்பாடாக இருந்தாலும் சக்தி வாய்ந்த வழிபாடாக இருக்கிறது.
இந்த உப்பு பிள்ளையார் வழிபாடு தொடர்ந்து 30 நாட்கள் செய்ய வேண்டும்.

எவ்வாறு வழிபட வேண்டும்
வீட்டில் பிள்ளையார் படத்திற்கு முன்பு ஒரு சிறிய அளவிலான தாம்பூல தட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதில் வாழை இலை விரித்து வைத்து அதன் மீது உப்பை குவியலாக கொட்டி பிள்ளையார் பிடியுங்கள்.
குவித்து வைத்த இந்த கல் உப்பின் மீது சந்தனம் மற்றும் குங்குமம் தூவுங்கள். அருகம்புல்லை அவரின் பாதத்தில் வையுங்கள்.
[9BHPUT
நைவேத்தியம்
பின்பு பிள்ளையாருக்கு நைவேத்தியம் படைக்க வாழைப்பழம் வைத்தால் போதும். பிள்ளையாருக்கு பிடித்த மற்ற எவ்விதமான நைவேத்தியங்களையும் தயாரித்து படைக்கலாம்.
30 நாட்கள் தொடர்ந்து உப்பு பிள்ளையார் முன்பு தியான நிலையில் அமர்ந்து மனதார வழிபட வேண்டும்.

வழிபாடு
பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தைரியத்தை கொடுக்க வேண்டியும், வெற்றி வேண்டியும் மனமார வேண்டிக் கொள்ளுங்கள்.
இவ்வாறு 30 நாட்கள் தொடர்ந்து வழிபட்ட பின்பு தாம்பூல தட்டை நீர் நிலைகளில் கொண்டு சென்று ஆறு, குளம் அல்லது கிணறு போன்றவற்றில் வாழை இலையோடு சேர்த்து பிள்ளையாரை கரைத்து விட வேண்டும்.

30 வது நாளில் வழிபாடு
பிள்ளையாரை கடைசி 30 வது நாளில் வழிபடும் பொழுது அவருக்கு மிகவும் பிடித்த மோதகம், சுண்டல் போன்றவற்றை தயாரித்து படைத்து வழிபட வேண்டும்.
இவ்வாறு செய்வதால் 30 நாட்களில் உங்கள் பிரச்சனைகள் தீரும். மறைமுக சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.