சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையில் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளால் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட சொகுசு விடுதி மற்றும் வீடுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த சட்டத்தின்படி, உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களை சேகரித்த வழிமுறையை நியாயப்படுத்த தவறினால் அல்லது முடியாவிட்டால், அவற்றை அரசு பறிமுதல் செய்ய முடியும்.
அதன்படி, சொத்துக்களின் உரிமையாளர்கள் தங்களது சொத்துக்கள் தொடர்பான சட்டபூர்வமான மூலங்களை நிரூபிக்க வேண்டும்.
இல்லை என்றால் தண்டனை விதிக்கப்படாமலேயே, சொத்துக்களை இழக்க நேரிடும் என இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.