தொடரும் உக்ரைன்- ரஷ்ய மோதல்; ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்பு
கடந்த 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரேனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதேநேரத்தில் உக்ரேனும் ரஷ்ய படைகளுக்கு ஈடுகொடுத்து போரிட்டு வருகிறது. இந்த போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் உக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரை 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800-க்கு மேற்பட்ட உக்ரேன் இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ரஷ்யாவும் போரில் ஏராளமான இராணுவ தளவாடங்களை இழந்துள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இதுவரை 49 விமானங்கள், 81 ஹெலிகொப்டர்கள், 335 பீரங்கிகள், 2 கப்பல்கள், 526 இராணுவ வாகனங்கள் உள்ளிட்ட ரஷ்ய இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரேன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சுமார் 12 ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் போரில் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரேன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.