காவன்திஸ்ஸ யானைக்கு துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது
'காவன்திஸ்ஸ' என்ற தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் பணியாற்றும் திறன் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போதே, இச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் இருந்து 12-போர் ரக துப்பாக்கி ஒன்று, 'கேப் துப்பாக்கி ஒன்று மற்றும் 24 தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நபர் இதற்கு முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் "டயானா" என அழைக்கப்பட்ட தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.