நாட்டில் ஒரு இலட்சம் நீரிழிவு நோயாளி ; மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
காயங்களுடன் கூடிய சுமார் ஒரு இலட்சம் நீரிழிவு நோயாளிகள் தற்போது நாட்டில் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் புற்றுநோயை விடவும் மிகவும் ஆபத்தானது என கொழும்பு தேசிய மருத்துவமனையின் இரத்தக் குழாய்கள் தொடர்பான விசேட சத்திரசிகிச்சை மருத்துவ நிபுணரான பேராசிரியர் ரெஸ்னி காசிம் குறிப்பிட்டார்.
நீரிழிவு நோயாளிகளின் கால்களில் ஏற்படும் சிறிய காயம் கூட, காலை வெட்டி அகற்ற வேண்டிய நிலைக்குச் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
நீரிழிவு நோய் காரணமாக ஒரு காலை இழந்தவர்களில், 30 வீதமானோருக்கு மூன்று ஆண்டுகளுக்குள் மற்ற காலையும் இழக்கும் ஆபத்து அதிகமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீரிழிவு காயங்கள் ஒரு சில வகையான புற்றுநோய்களைத் (கணையம் மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள்) தவிர, மற்ற அனைத்து வகையான புற்றுநோய்களை விடவும் மிகவும் ஆபத்தானது என்று அவர் எச்சரித்தார்.
100 பேருக்கு நீரிழிவு இருந்தால், 20 பேருக்கு இந்தக் காயங்கள் ஏற்படலாம். நீரிழிவு காயம் காரணமாக ஒரு காலை இழந்தால், 30 வீதமானோருக்கு மூன்று ஆண்டுகளுக்குள் மற்ற காலையும் இழக்கும் வாய்ப்பு உள்ளது.
66 வீதமானோருக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் மற்றொரு கால் இழக்கும் அபாயம் உள்ளது. இப்படி ஒரு பிரச்சினை வந்தால், கால் அகற்றப்படும் வாய்ப்பு 15 மடங்கு முதல் 30 மடங்கு வரை அதிகமாக உள்ளது. அதே சமயம், இவ்வாறு அகற்றப்படும் கால்களில் சுமார் 85 முதல் 90 சதவீதம் வரையிலானவை ஒரு சிறிய காயத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன.
இரத்த ஓட்டம் சரியாகச் செல்லாது, நீரிழிவு காரணமாக நரம்புகள் சரியாக வேலை செய்யாது, கல்சியம் படிவுகள் உருவாகின்றமை போன்றன காரணமாக இருக்கலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் குறைந்தபட்சம் இரண்டு மில்லியன் (20 இலட்சம்) நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இதில் ஆண்டுக்கு நாற்பதாயிரம் புதிய காயங்கள் ஏற்படுகின்றன.

இந்த நீரிழிவு காயங்கள் ஏன் புற்றுநோயைப் போல ஆபத்தானது என்று நாம் நினைக்கிறோம்? இரண்டுக்கும் சிறிய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே நீண்ட காலத்திற்குச் சென்று, படிப்படியாக அதிகரித்து, உயிரையும் பறிக்கும் திறன் கொண்டவை.
பொதுவாக, அனைத்து புற்றுநோய்களையும் சேர்த்தால், ஒரு வருடத்திற்குள் இறப்பவர்களின் விகிதம் 30 வீதம் ஆகும். ஆனால், எங்கள் நோயாளர் அறையில் அகற்றப்பட்ட கால்களைக் கொண்டவர்களில், நான்கு வருடங்களின் முடிவில் 35 வீதமானோர் மட்டுமே உயிருடன் இருந்தனர்.
அதாவது, கால் அகற்றப்பட்ட பிறகு மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 65 வீதமானோர்) பேர் உயிரை இழக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        