விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஒரு நாள் சலுகை!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரி இல்லாத சலுகையின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயணிகள் தரையிறங்கிய அன்றைய தினமே அவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும். வரி இல்லாத சலுகையின் கீழ் பொருட்களை கொள்வனவு செய்யும் பகுதிக்குள் பயணிகள் நுழைவதற்கு முன், விமான நிலைய மருத்துவ அலுவலகம் தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியவர்களின் அட்டையில் சிவப்பு முத்திரை இடப்பட்டு, முத்திரை பொறிக்கப்பட்டவர்களே, வரி இல்லாத சலுகையில் பொருட்களை கொள்வனவு செய்யும் பகுதிக்குள் நுழையலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை விமான நிலையத்தில் தரையிறங்கிய அன்றைய நாளை தவிர, அடுத்தடுத்த நாட்களில் வரி இல்லாத சலுகையில் பொருட்களை வாங்கும் இடங்களிற்கு செல்ல முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.