ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கான காரணத்தை விளக்கிய மத்திய வங்கி ஆளுநர்
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலையும் அதன் தாக்கமாக உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை உயர்வும், இந்த ஆண்டில் இலங்கை ரூபா வீழ்ச்சியடைவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் இறக்குமதிக்கான வெளிநாட்டு நாணயத் தேவைகள் அதிகரித்துள்ளதால் ரூபாவின் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா 4.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதே காலப்பகுதியில் இந்திய ரூபா 6.4 சதவீதத்தாலும், நேபாள ரூபா 6.2 சதவீதத்தாலும், இந்தோனேசிய நாணயம் 5.2 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம், நாணய வீழ்ச்சி என்பது இலங்கைக்கு மட்டும் உரிய பிரச்சினையல்ல என்றும், எண்ணெய் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ள பல நாடுகளையும் பாதித்துள்ள உலகளாவிய பொருளாதார அதிர்வின் விளைவாகவே இதை பார்க்க வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
மேலும், 2022 ஆம் ஆண்டில் இலங்கை ரூபா கடுமையாக வீழ்ச்சியடைந்தது நாட்டின் உள்நாட்டு பொருளாதாரப் பிரச்சினைகளால் ஏற்பட்டதாகவும், தற்போதைய நிலைமை அதிலிருந்து மாறுபட்டதாக இருந்து, சர்வதேச சந்தை காரணிகளுடன் தொடர்புடையதாகவும் அவர் விளக்கமளித்தார்.
நாணய மாற்று விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டது என முடிவு செய்வது தவறான அணுகுமுறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் நாணயங்களும் வரலாற்றில் குறைந்த மட்டங்களை எட்டியுள்ள நிலையிலும், அவற்றின் பொருளாதாரங்கள் முற்றிலும் வீழ்ச்சியடைந்துவிட்டன என்று கூற முடியாது எனவும், பொருளாதார நிலையை மதிப்பிடுவதில் பல காரணிகளை ஒருங்கிணைத்து பார்க்க வேண்டியது அவசியம் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.