லண்டனில் இலங்கை தமிழரின் மோசமான செயல்; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு சொந்தமான கோழிக்கடையில் சட்டவிரோத தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் கடையின் உரிமம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதோடு சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியதால் பெருந்தொகை ஸ்ரேலிங் பவுண்ட் அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
9 பேர் கைது
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு இடையில் நான்கு முறை குறித்த கடை உள்துறை அலுவலக குடிவரவு அமலாக்க அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சட்டவிரோத தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 9 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடையின் உரிமையாளரான தமிழர் குடியேற்றச் சட்டங்களை முழுமையாக புறக்கணித்ததாகவும், தனது வணிக நடைமுறைகளை மேம்படுத்த விருப்பவில்லை எனவும் உள்துறை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத தொழிலாளர்கள் அனைவரும் சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்கள் என கூறப்படுகின்றது.
அதோடு அவர்களில் யாரும் அகதி தஞ்சம் கோரவில்லை அல்லது பிரித்தானியாவில் வேலை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அமலாக்க அதிகாரிகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.