இந்த உணவுகளை பச்சையா சாப்பிட்டா தான் முழு சத்தும் கிடைக்கும் தெரியுமா?
ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் பாதியும் வாழ்க்கை முறையில் மீதியும் அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். அதனாலேயே உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுவதில் நாம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
அவற்றை நாம் விரும்பு வகையில் சுவையாகவும் விதவிதமாகவும் சமைத்து சாப்பிடுகிறோம். ஆனால் சில உணவுகளை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடும்போது அதிலுள்ள உயிரூட்டமுள்ள சத்துக்கள் அப்படியே முழுமையாக உங்களுக்குக் கிடைக்கும். அந்த உணவுகளில் சிலவற்றை நாம் இங்கு பார்ப்போம்.
கரட்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று. இதை பெரும்பாலும் சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதையே பெரும்பாலும் விரும்புவோம். அதேபோல பச்சையாக சாப்பிடும்போது தான் அதன் முழு பலனும் நமக்கு கிடைக்கும். கேரட்டை பச்சையாக சாப்பிடும்போது அதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து முழுமையாக நமக்குக் கிடைக்கும். இதன்மூலம் சரும ஆரோக்கியமும் கண் ஆரோக்கியமும் பல மடங்கு மேம்படும்.
ஸ்பின்னாச்
ஸ்பின்னாச் என்னும் பசலை கீரை வகைகளை நாம் எப்போதும் பொரியல், மசியல், கூட்டு என்று செய்து சாப்பிடுவோம். குழந்தைகள் பெரும்பாலும் கீரையே சாப்பிடுவது இல்லை. ஆனால் ஸ்பின்னாச் பச்சையாக சாப்பிடும்போது தான் அதன் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும். இதிலுள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் ஆகியவை முழுமையாகக் கிடைக்கும். அவை, நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தவும் செல்கள் வளர்ச்சிக்கும் உதவி செய்யும்.
நட்ஸ்
நட்ஸ் என்றாலே நாம் அதை நெய்யில் வறுத்து, மசாலா சேர்த்து அல்லது இனிப்பு சேர்த்து லட்டுகளாக செய்து என்று சாப்பிடுகிறோம். இப்படி ப்ராசஸ் செய்யும்போது அதன் சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைப்பதில்லை. நட்ஸ் வகைகளைப் பொருத்தவரையில் அப்படியே பச்சையாகத் தான் சாப்பிட வேண்டும். பாதாம், வால்நட் உள்ளிட்ட நட்ஸ் வகைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் பிற மினரல்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு தேவையான முக்கியமான மினரல்களாகும்
பூண்டு
பூண்டில் இருந்து வரும் கடுமையான வாசனை நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் சமைத்து சாப்பிடும்போது அதன் சுவை பிடிக்கும். ஆனால் பூண்டை சமைத்து சாப்பிடுவதை காட்டிலும் பச்சையாக சாப்பிடுவது தான் நல்லது. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் ஆற்றல் மிக்க மூலக்கூறு நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
குடைமிளகாய்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் விரும்பாத காய் என்றால் அது குடைமிளகாய் என்று சொல்லலாம். ஆனால் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கும் ஒரு காய். இதையும் நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ் போன்றவற்றில் சேர்த்து சமைத்து தான் சாப்பிடுகிறோம். ஆனால் குடைமிளகாயை பச்சையாக சாப்பிடலாம். அதில் எந்தவித காரமும் இருக்காது. மெல்லிய இனிப்புச் சுவையுடன் தான் இருக்கும். சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு ஆகிய நிறங்களில் இருக்கும் இந்த குடைமிளகாயை உங்களுடைய சாலட் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடும் போது அதிலுள்ள வைட்டமின் சி உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.