நண்பியை நம்பி ஏமாந்து கடனில் சிக்கிய தாதிக்கு நேர்ந்த கதி
கம்பஹா, வத்துபிட்டிவல ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த ஒரு இளம் பெண் தாதி நேற்று முன்தினம் உயிரை மாய்த்துள்ளார்.
வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் போது அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் ஹிமாயா செவ்வந்தி டி அல்விஸ் என்ற 23 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெண்ணின் தாய் வாக்குமூலம்
குறித்த யுவதி அத்தனகல்ல பகுதியை சேர்ந்த திருமணமாகாத தாதி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி குறித்த யுவதி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும், வீட்டில் இருந்த அவரது தாயும் தம்பியும் வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
தனது மகள் ஒரு நண்பரின் வேண்டுகோளின் பேரில் ஒன்லைனில் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தனது நண்பிக்கு வழங்கியதாக உயிரிழந்த தாதியின் தாயார் சுனிதா தெரிவித்துள்ளார். தோழி கடனை செலுத்தாமையினால் அதற்கான வட்டி 28,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடன் கொடுத்த நபர் தனது மகளை தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் மற்றும் வட்டியை செலுத்துமாறும் இல்லை என்றால் பொலிஸாரை அழைத்து வருவதாக அச்சுறுத்து வந்துள்ளார்.
குறித்த நபரின் துன்புறுத்தல் தாங்க முடியவில்லையாமலேயே மகள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என உயிரிழந்த பெண்ணின் தாய் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அண்மைக்காலமாக இவ்வாறான இணையம் ஊடாக முறையற்ற வகையில் கடன்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த நிறுவனங்களால் கடும் அழுத்தங்களுக்கு உள்ளான பலர் ஏற்கனவே உயிரை மாய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.