கொழும்பில் தாதி ஒருவரின் பணப்பையை திருடி மோசடி செய்த மற்றொரு தாதிக்கு நேர்ந்த கதி!
கொழும்பு - பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தாதி ஒருவரின் பணப்பையை திருடி அவரது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த மற்றுமொரு தாதி கைது செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரியும் தாதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள தாதிப் பெண்
குறித்த தாதியின் பணப்பை வேலை செய்யும் இடத்தில் கடந்த (16.08.2023) ஆம் திகதி 2000 ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் காணாமல் போனதாக குறித்த சிகிச்சைப் பிரிவில் தொழில் புரிந்து வரும் தாதி ஒருவர் பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வழங்கப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பாணந்துறையில் உள்ள தனியார் வங்கியொன்றில் இருந்து முறைப்பாடு செய்த தாதிக்கு, “நீங்கள் வாங்கிய கடனுக்கான தவணை சரியாக செலுத்தப்படவில்லை எனவும், அதனை செலுத்துமாறும்” என நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அதே பிரிவில் தொழில் புரியும் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் இன்று (27.09.2023) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.