இலங்கையில் பாலியல் தொழிலாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரிக்கை
இலங்கையில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், அவர்கள் அனைவரும் பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் பேராசிரியர், சட்டத்தரணி பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.
பாலியல் தொழிலாளர் பெண்களை சமூகத்தில் ஒதுக்காமல் மற்றும் புறக்கணிக்காமல் ஒருங்கிணைப்பது குறித்து இலங்கையின் முன்னணி இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக, கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வு ஒன்றிலேயே பேராசிரியர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகள் மூலம் பாலியல் கல்வியை மேலும் பிரபலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், பாலியல் தொழிலாளர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் இருக்க வேண்டும் என்றும், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களும் ஆண்களும் சமூகத்தில் ஒருவித அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்றும் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தற்போது பாலியல் தொழிலாளர்களில் 95 சதவீதமானோர் ஆணுறைகளைப் பயன்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த மருத்துவர் ஹரிஸ்சந்திர யக்கந்தாவல தெரிவித்துள்ளார்.
இதனால் பாலியல் தொழிலாளர்களில் பலர் பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றுவதாலும், சமூகத்தில் பாலியல் நோய்கள் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலர் பாடசாலை பிள்ளைகள், ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் உயர் வகுப்பு மாணவர்கள் எனப் பிரித்து, தனித்தனியாகப் பாலியல் கல்வி கற்பிக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் உறுப்புகள் பற்றியோ அல்லது பாலியல் செயல்முறைகள் பற்றியோ விழிப்புணர்வு இல்லை என்றும் மருத்துவர் ஹரிஸ்சந்திர யக்கந்தாவல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை ஒதுக்காமல் மற்றும் புறக்கணிக்காமல் சமூகத்துடன் இணைக்க அனைவரும் தயாராக வேண்டும் என்று இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்த சமூக சக்தி அபிவிருத்தி அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எச். ஏ. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது அறக்கட்டளை ஏற்கனவே கொழும்பு, குருநாகல், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்தாயிரம் பாலியல் தொழிலாளர்களை இந்த பணிகளில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.