சத்துணவு திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலை சத்துணவு திட்டம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியதாகவும் அவை உண்மைக்கு புறம்பானதெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், ''தற்போது பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி வருகின்றன.
ஆனால் இந்த திட்டத்தை எந்த வகையிலும் நிறுத்த யாரும் கேட்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிதி அமைச்சின் மூலமாக, பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தேவையான 1200 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டைப் பெறுவது பற்றியும் கலந்தாலோசித்து வருகின்றோம்.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் அமைச்சினால் இத்திட்டத்திற்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது, எதிர்கால நடவடிக்கைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அமைச்சர் அதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
அத்துடன் மேல் மாகாண சபைக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதும் அதனை பெற்றுக்கொள்வதில் சிறிய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனை நிதி ஆணையாளருடன் பேசி அந்நிதியை விடுவிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.''என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.