முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை நாளைய தினத்திற்குள் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
108 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டிருந்ததாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களைக் கையளித்துள்ளனர்.
108 உத்தியோகப்பூர்வ இல்லங்களில் 70 இல்லங்களின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விமானப்படையுடன் இணைந்து இராணுவம் மற்றும் கடற்படையினரும் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
10வது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள எம்,பிக்களுக்கு, உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதிக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
சட்டரீதியாக நாளை மறுதினம் முதல் அதற்கான இயலுமை காணப்படுகின்ற போதிலும், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.