வெசாக் விடுமுறையில் பயணம் செய்வோருக்கு முக்கிய தகவல் ; அவதானம் மக்களே
வெசாக் பண்டிகைக் காலப்பகுதியில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிந்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இவ்விடயம் தொடர்பில் இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்

நீண்ட விடுமுறை
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளன. பொதுவாக இவ்வாறான வார இறுதி விடுமுறை நாட்களில் விபத்துக்கள், குறிப்பாக வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி ஏற்படும் விபத்துக்கள் கணிசமான அளவில் அதிகரிப்பதை அவதானித்துள்ளோம்.
பொதுமக்கள் வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்வதே இதற்கு முக்கிய காரணமாகும். ஆகையால் எமது பாதுகாப்பை மாத்திரமன்றி ஏனைாயரது பாதுகாப்பையும் நாம் உறுதிப்படுத்திக் கொள்ளாவிட்டால், விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும்.
வாகனங்களைச் செலுத்தும் போது ஏற்படும் தூக்கக் கலக்கம் அல்லது அதீத சோர்வு, போதைப்பொருட்கள் மற்றும் மதுபானப் பாவனை, அத்துடன் நிலவிவரும் காலநிலை மாற்றங்கள் காரணமாக விபத்துக்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
அதேபோல், வெசாக் காலப்பகுதியில் வீடுகளை அலங்கரிப்பதற்காக மின்விளக்குகளைப் பயன்படுத்துவதிலும் விளக்குகளை ஏற்றுவதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறோம்.
மின்விளக்குகளை ஒளிரச் செய்யும் போது, முறையான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், வீட்டின் மின்சுற்றுகளில் இருந்து ஆபத்தான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலைமைகள் பரவலாகக் காணப்படுகின்றன.
எனவே, மின்சாரப் பயன்பாடு குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பொதுமக்கள் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள் மற்றும் தன்சல் போன்றவற்றைத் பார்வையிடுவதற்காகத் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர்.
அவ்வாறு பயணம் செய்யும் போது, தாங்கள் செல்லும் வாகனம் தரம் வாய்ந்ததா, அதில் எத்தனை பேர் பயணிக்க முடியும் என்பது குறித்தும், அந்தப் பயண முறை தங்களது மற்றும் ஏனையோரின் பாதுகாப்புக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.