இலங்கையின் போக்குவரத்துச் சவால்கள் குறித்து நோர்வேயில் கலந்துரையாடல்
வீதிப் பாதுகாப்பு, நிலைபேறான போக்குவரத்து மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நோர்வே போக்குவரத்து அமைச்சர் கம்ஸி குணரட்னத்தைச் சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.
நோர்வே போக்குவரத்து அமைச்சின் அலுவலகத்தில் ரத்நாயக்க மற்றும் அவரது குழுவினரை வரவேற்றதில் மகிழ்ச்சியடைவதாக கம்ஸி குணரட்னம் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறையைச் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றுதல், அத்துறையில் தொழிலாளர் உரிமைகள் மற்றும் நியாயமான வேலைவாய்ப்பு நிலைமைகளை உறுதிப்படுத்துதல், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் பலர் இளைஞர்கள் எனவும் பிமல் ரத்நாயக்க தமக்குத் தெரிவித்ததாக கம்ஸி குறிப்பிட்டுள்ளார்.
இந்த உயிரிழப்புகள் மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்த அவர், வீதிப் பாதுகாப்பு என்பது போக்குவரத்துடன் மாத்திரம் தொடர்புடைய விடயமல்ல என்றும், அது மனித உயிர்கள், குடும்பங்கள் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடையது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சமூக உள்ளடக்கம் மற்றும் பல்வேறு இன, சமூக மற்றும் புவியியல் பின்னணிகளைக் கொண்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இரு அமைச்சர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த கம்ஸி குணரட்னம், இலங்கையின் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட நீண்டகாலப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியதுடன், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் போக்குவரத்துச் சவால்களுக்குத் தீர்வுகாணும் அதேவேளை, சமூகப் பிளவுகளைக் குறைத்து மக்களை ஒன்றிணைக்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதில் இலங்கைத் தூதுக்குழுவினர் வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.
“ஏனெனில், அதுவே சிறந்த போக்குவரத்துக் கொள்கையின் நோக்கமாகும். மக்களை ஒன்றிணைப்பதே அதன் அடிப்படை,” என்றும் கம்ஸி குணரட்னம் தெரிவித்துள்ளார்.
நோர்வே தொழிலாளர் கட்சியின் உறுப்பினரான கம்ஸி குணரட்னம், ஒஸ்லோவின் முன்னாள் துணை மேயராகவும் பணியாற்றியுள்ளார். அவர் 2026 செப்டெம்பர் மாதம் நோர்வேயின் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.