டக்ளஸ் மீது புதிய வழக்குகள் ; வட மாகாண அதிகாரிகள் பலரும் கைது
கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென அரசு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கைவிரிக்கப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தொடர்பான கடந்த கால மோசடிகள் மற்றும் காணி ஒதுக்கீடுகளைச் சுட்டிக்காட்டும் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளுக்கு அரச நிலங்கள் வாடகை செலுத்தப்படாமல் ஓதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இவை சுமார் நாலாயிரம் ஏக்கர் நிலங்களாகவும், முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், முறையற்ற அரச காணிகள் மற்றும் மாதாந்தம் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கான குற்றச்சாட்டுகள் காணித்திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக எழுந்துள்ளன.
இதனால் முன்னாள் வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் தற்போதைய வடமாகாண சபை அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு தரப்பின் தகவலின்படி, கடலட்டை பண்ணைகளின் நிலங்களை பிரதேச செயலகங்கள் வழியாக ஒதுக்குதல் செய்யாமல், முன்னாள் அமைச்சர் தன்னிச்சையாக தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியதாகவும், இந்நிலையில் அதற்கு தொடர்புடைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது அரசு டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது விசுவாச அதிகாரிகளையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளது.