ஒரே குண்டு..பெரும் அழிவு ; கொத்து குண்டு சோதனையால் உலகை அதிர வைக்கும் வடகொரியா
வடகொரியா தந்திரோபாய பொலிஸ்டிக் ஏவுகணைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள “வகை 2” கொத்துக் குண்டு வெடிபொருளை கடந்த சனிக்கிழமை (31) வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் தயார்நிலை மற்றும் கொத்துக் குண்டு ஆயுதங்களின் தாக்குதல் திறனை மதிப்பிடும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையை வடகொரிய இராணுவ ஜெனரல் கிம் ஜாங் சிக் மேற்பார்வையிட்டுள்ளார்.

வடகொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனங்களின் தகவலின்படி, நிலையான வகை-2 கொத்துப் போர்க்குண்டு அதன் அதிகபட்ச அடர்த்தியில் வெடிக்கும்போது, 12 முதல் 13 ஹெக்டேர் வரையான, அதாவது சுமார் 30 முதல் 32 ஏக்கர் பரப்பளவை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
சிறப்பு மற்றும் தரப்படுத்தப்பட்ட தேவைகளுக்காக கொத்துக் குண்டு வெடிபொருட்களை நான்கு வகைகளாகப் பிரித்துள்ளதாகவும், அவற்றை இந்த ஆண்டின் இறுதிக்குள் இராணுவப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட பியோங்கான் மாகாணத்திலிருந்து மஞ்சள் கடலை நோக்கி ஏவப்பட்ட இந்த ஏவுகணைச் சோதனையைத் தென்கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகள் உன்னிப்பாகக் கண்காணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் ட்ரோன்கள், டார்பிடோ அமைப்பு மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வடகொரியா அண்மைக்காலமாகச் சோதித்துள்ள நிலையில், இந்தப் புதிய சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகள் தொடர்பான ஒப்பந்தமான ‘கொத்துக் குண்டுகள் மீதான உடன்படிக்கையில்’ வடகொரியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.