இலங்கை பெயரில் எந்த செயற்கைக்கோளும் இல்லை!
சர்வதேசத் தொலைத்தொடர்பு தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சுப்ரீம் சாட்-1 (SupremeSAT-1)
சர்வதேசத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union - ITU) என்ற ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பப் பணிகளை ஒருங்கிணைக்கிறது.
இதில், இலங்கை சார்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுப்பினராக உள்ளது. ITU தரவுகளின்படி, புவிசார் சுற்றுப்பாதைகளில் இலங்கைக்காக 121.5 மற்றும் 50 ஆகிய இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எனினும், இந்த இடங்களில் ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, நேபாளம், தஜிகிஸ்தான் மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் தங்கள் செயற்கைக்கோள்களை இயக்க முடியும். இந்த இரண்டு சுற்றுப்பாதைகளிலும் தற்போது இலங்கை என்ற பெயரில் எந்தச் செயற்கைக்கோளும் இல்லை என்பது ITU மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுப்ரீம் சாட்-1 (SupremeSAT-1) என்ற செயற்கைக்கோள் ITU மூலம் இயக்கப்படுகிறதா என ஆராயப்பட்டபோதும், அவ்வாறு எதுவும் இல்லை என உறுதியானதாக அமைச்சர் தெரிவித்தார்.