மஹிந்தவை தூக்கிலிடும் எண்ணம் இல்லை ; சரத் பொன்சேகா
அண்மையில் மாத்தறையில் தான் ஆற்றிய உரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிடும் நோக்கம் தனக்கு ஒருபோதும் இருக்கவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெளிவுபடுத்தினார்.
"2009 ஆம் ஆண்டு பெப்ரவரியில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டதாலும், பாதுகாப்புப் படையினரின் முன்னணி பாதுகாப்பு பிரிவை அழித்ததாலும், முன்னாள் ஜனாதிபதி தூக்கிலிடப்பட்டிருப்பார் என்றுதான் நான் கூறினேன்.
தேசத் துரோகம்
தேசத் துரோகம் செய்த ஒருவரை தென் கொரியாவில் விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் கொண்டு சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்றும், சவுதி அரேபியாவில் காலில் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள் என்றும்தான் நான் குறிப்பிட்டேன்" என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
"எனது கருத்துகளைத் திரித்துக் கூறி, ஒரு பௌத்த பிக்கு உட்பட சிலர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், மாத்தறையில் கடந்த வாரம் சரத் பொன்சேகா ஆற்றிய உரையில், “வேறு நாடாக இருந்திருப்பின் மஹிந்த ராஜபக்ஷவின் தேச துரோக செயலுக்கு தூக்கிலிடப்பட்டிருப்பார் என்றும், இலங்கையின் அரசியலமைப்பின்படியும் அவ்வாறு தான்” என்றும் அவர் கூறியிருந்தார்.