கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படும் குண்டுத்தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விளக்கம்
கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்ததாக பரவி வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அவ்வாறான எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உட்லர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டதாகவும் சந்தேகத்தின் பேரில், குற்றக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
கொழும்பில் குண்டுத்தாக்குதல்
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

ஜா-எல, களவேதிய பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
28 வயதான அவர் கொழும்பு, பஹாலவ அலுத் மாவத்த, குவான பகுதியைச் சேர்ந்தவராகும். பிரபலமான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான முகமது நஜீம் முகமது இம்ரா எனப்படும் கஞ்சிபானி இம்ரானுடன், சந்தேக நபருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபரின் கைது குறித்த செய்தியுடன், கொழும்பு மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக வதந்திகள் பரவின.
பயங்கரவாத எதிர்ப்பு
இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவப்பட்ட நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜா எலா பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஒரு சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்படும் என்றும், ஆனால் தாக்குதல் நடக்கும் என அஞ்சத் தேவையில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தினார்.