நுவரெலியாவை சுத்தப்படுத்த வந்த குழுவிற்கு இரவில் நேர்ந்த அசம்பாவிதம்
நுவரெலியா நகரத்தை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட குழுவினரை ஏற்றிச்சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிதீவிர வானிலை காரணமாக சேதமடைந்த நுவரெலியா நகரிலுள்ள பொது இடங்களையும், நகரத்தையும் சுத்தப்படுத்துவதற்காக களுத்துறை பிரதேசத்திலிருந்து வந்த குழுவினர் பயணித்த பேருந்தே நேற்று (06) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து
களுத்துறை பகுதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்னர் இவர்கள் நுவரெலியாவுக்கு சென்று சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
தமது பணி நிறைவடைந்த பிறகு, நுவரெலியாவிலிருந்து ரதெல்ல குறுக்குப்பாதை வழியாக களுத்துறை நோக்கிப் பேருந்து பயணித்தபோது, சமர்செட் தோட்டப் பகுதியில் உள்ள அதிக செங்குத்தான சரிவில் பேருந்தின் தடையாளி செயலிழந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பேருந்து, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்திலிருந்த மண் மேட்டில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், பேருந்துக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை அறியாமல், விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி வாகனத்தைச் செலுத்தியுள்ளார் என்றும் காவல்துறை குறிப்பிட்டது.