திருமணமாகி 13 நாட்களில் அரங்கேறிய சோகம் ; புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை
இந்தியாவின் திண்டுக்கல் மாவட்டம் திருமணமாகி 13 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் கவுதம் (31 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காற்றாலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்த, 29 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது.

இதையொட்டி அவர்கள் இருவரும் கடந்த 3-ந்திகதி திருமணம் செய்து கொண்டு மூலனூரில் வசித்தனர். அதன்பின்னர் இருவருக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட தகராறில் மனஉளைச்சலுக்கு ஆளான கவுதம், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
தீக்காயங்களுடன் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மூலனூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.