பிலவ புது வருடப்பிறப்பு - 2021 ; எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும்!
சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அந்தவகையில் செவ்வாய் 10 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த பிலவ வருடம் பிறக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை ஒரு மணி 39 நிமிடத்தில் பிறக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 14 ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை 02 மணி 31 நிமிடத்திலும் பிறக்கிறது.
மருத்து நீர்
விஷபுண்ணிய காலம் (மருத்துநீர் வைக்கும் நேரம் ) வாக்கியப் பஞ்சாங்கத்தின் படி 13 ஆம் திகதி இரவு 09.39 முதல் அதிகாலை 05.39 வரையும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 13 ஆம் திகதி இரவு 10.33 முதல் அதிகாலை 06.33வரையும் இந்த புண்ணிய காலத்தில் சகலரும் மருத்து நீர் தேய்த்து சிரசில் இலவம் இலையையும், காலில் விளா இலையையும் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும். மருத்து நீர் மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது.
இம்மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்படும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும்.
பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பிலவ ஆண்டு மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
சித்திரை மாதத்தின் சிறப்பு
எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு.சித்திரையில் மட்டும் அப்படி என்ன விசேஷம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு. தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.
அத்துடன் மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களான ஐக்கியம், சமய, சமூக, கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப் படும் சமுக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு, தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம்.
சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது அதன்படி இந்த வருடத்தில் ஆடை நீலம் சிவப்பு நிறப் பட்டாடை அல்லது நீலம் சிவப்பு கரை அமைந்த புதிய பட்டாடையும், நீலம் பவளம் இழைத்த ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் என வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகிய கோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும். அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.
கைவிஷேடம்
கைவிஷேடம் வாக்கிய பங்சாங்கத்தின் படி 14புதன் முற் பகல் 09.09 முதல் 09.52 வரையும் மற்றும் பிற்பகல் 02.22 முதல் 04.11 வரை 16ம் திகதி அதிகாலை 04.14 முதல் 05.07 வரை 17ம் திகதி காலை 07.40 முதல் 09.00மணிவரையான காலத்தில் செய்தல் சிறப்பு திருக்கணித பங்சாங்கத்தின் படி 14 புதன் முற்பகல் 06.15 முதல் 07.30 வரையும் மற்றும் பிற்பகல் 06.150 முதல் 07.00வரை 16ம் திகதி அதிகாலை 05.15 முதல் 06.00 வரை 17ம் திகதி காலை 10.30 முதல் 11.40 மணி வரையான காலத்தில் செய்தல் சிறப்பு.
சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர். சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டலம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது.
ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
இலங்கையில் சித்திரைப் புதுவருடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழாவாக இங்கு சிறப்புப் பெறுவதுடன், தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தாலும் கொண்டாடுவதில் சில தனித்தனியான பாரம்பரிய கலாசார நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.
சிங்கள பெளத்தர்கள் சித்திரைப் புத்தாண்டை பகைமை ஒழிப்புக்கான சிறந்த வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகின்றது. நீண்ட காலமாக பகைமை கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை பார்க்கச் சென்று பகைமை தீர்த்துக் கொள்ளப்படும். கலை கலாச்சார நிகழ்வுகள் இம் முறை கொரோனாவின் அகோர பிடியால் இவை சாத்தியமற்றது எனினும் சுகாதா வழிமுறைகளுடன் நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் சிறப்பாகவே கொண்டாடப்படும்.
புதுவருடத்தின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற்கருமங்களை ஆரம்பிப்பதும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல நாள் பார்த்து தங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.
பிறக்கவிருக்கும் இந்த பிலவ வருட புத்தாண்டு எல்லோருக்கும் நல்ல சுபீட்சம் தரும் ஆண்டாகவும் தொட்டது துலங்கும் ஆண்டாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.