கிழக்கு பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைகளுக்கு அபராதம்
கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத மூன்று சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட எட்டு வழக்குகளை விசாரித்த ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம், 1,50,000 ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்று (23) பிறப்பிக்கப்பட்டுள்ளது. செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குறித்த சிற்றுண்டிச்சாலைகளில் சோதனைகளை மேற்கொண்டு சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியிருந்தனர்.

மூன்று சிற்றுண்டிச்சாலைகளுக்கும் எதிராக வழக்கு
எனினும், விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியதைத் தொடர்ந்து, மூன்று சிற்றுண்டிச்சாலைகளுக்கும் எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிவான், மூன்று சிற்றுண்டிச்சாலைகளுக்கும் மொத்தமாக 1,50,000 ரூபா அபராதம் விதித்ததுடன், அவற்றில் இரண்டு சிற்றுண்டிச்சாலைகளை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடவும் உத்தரவிட்டார். மேலும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பரிந்துரைத்த திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் கட்டளையிட்டுள்ளார்.