சுஷாந்த் சிங் மேலாளர் திஷா சாலியன் மரண வழக்கில் புதிய திருப்பம்
மறைந்த இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியனின் மரணம் தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஷா சாலியன் மரணமடைத்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ. விசாரணையை தொடங்க்கியுள்ளது. இது குறித்து இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,

மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
அவரது மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரபலங்களின் மேலாளராகப் பணியாற்றிய திஷா சாலியன், 2020ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் திகதி உடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்துக்குச் சில நாட்களுக்குப் பின்னர், சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் உடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
திஷா சாலியனின் மரணம் ஆரம்பத்தில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மரணம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.
மேலும், அவரது மரணத்துக்கு ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் பிரதிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படாததையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்திருந்தது.

அத்துடன், திஷாவின் தந்தை சதீஷ் சாலியன், தனது மகளின் மரணத்துக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளதாகவும், விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சிலரின் பெயர்களைத் தெரிவித்துள்ளதாகவும் கூறியிருந்தார்.
எனினும், திஷா சாலியனின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் வெளியாகவில்லை.
இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவின் விசாரணை மற்றும் அதனடிப்படையிலான சட்ட நடவடிக்கைகளுக்குப் பின்னரே மேலதிக தகவல்கள் உறுதியாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.