தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள ஆர். வீரமணி வழக்கு
கிரானைட் வர்த்தகப் பிரமுகர் ஆர். வீரமணி மீதான போக்ஸோ வழக்கு விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளின் கீழ், தொழிலதிபர் ஆர். வீரமணி காவல்துறை அதிகாரிகளால் போக்சோ (POCSO) சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் அளித்த ரகசிய புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் பாலியல் தடுப்புப் பிரிவு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
புகார்தாரர் அளித்த பென்டிரைவை ஆய்வு செய்தபோது, அதில் வயதான நபர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
தொழிலதிபர் வீராமணியால் குறைந்தபட்சம் 9 சிறுமிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களை புலனாய்வாளர்கள் திரட்டியுள்ளனர்.
இன்னும் இதில் சம்பந்தப்பட்ட மற்ற தொழிலதிபர்களும், பிரமுகர்களும் எப்போது கைது செய்யப்படுவார்கள் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், 'பகாசூரன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தான் ’பகாசூரன்’ படம் எடுத்தபோது பல உண்மைகளைச் சேகரித்ததாகவும், தன்னைச் சமூகத்தில் பெரிய மனிதர்களாகக் காட்டிக்கொள்பவர்களின் கோர முகங்கள் அப்போது தனக்குத் தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், படம் வெளியான தினம் கூட சில அரசியல்வாதிகளை வைத்துத் தமக்கு நெருக்கடி கொடுத்து சில காட்சிகளை நீக்கச் செய்தார்கள் என்றும், அந்த மனித மிருகங்களின் முகங்கள் மக்களிடையே கிழியும் நாளுக்காகத் தான் காத்திருப்பதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
வீரமணி போன்ற குற்றவாளிகள் மட்டும் தனியாக இருக்க மாட்டார்கள்; அவர்களின் பின்னணியில் இன்னும் பல பெரிய மனித மிருகங்கள் இருக்கக்கூடும். எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
இந்தச் சமூகக் குற்றத்தை மூடிமறைக்க உதவிய காவல்துறை அதிகாரிகள், அழுத்தம் கொடுத்த அன்றைய அமைச்சர்கள் மற்றும் தேவைப்பட்டால் முன்னாள் முதல்வர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார்.