விமானப் பயணிகளுக்குப் புதிய வரி ; அதிர்ச்சி கொடுத்த நாடு
சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானப் பயணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பசுமை எரிபொருள் வரி விதிக்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் சிங்கப்பூரின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய வரி
அடுத்த ஆண்டு ஒக்டோபர் 1 முதல் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களுக்கான பயணிகளுக்கு இந்த வரி அமுலுக்கு வரும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தப் புதிய வரியின் கீழ், விமானப் பயணிகள் அதிகபட்சமாகச் சிங்கப்பூர் டொலர் 41.60 (S$41.60) வரை கட்டணம் செலுத்த நேரிடும்.
இந்த வரி 2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் விற்கப்படும் விமான டிக்கெட்டுகளுக்கு பொருந்தும். அத்துடன், சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் குறித்த வரி அமுலுக்கு வரும்.
மேலும் சிங்கப்பூர் வழியாகப் பயணிக்கும் பயணிகள் குறித்த வரியைச் செலுத்த வேண்டியதில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பயணிகளின் விமான வகுப்பு மற்றும் செல்லும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து இந்த கட்டணம் மாறுபடும் என்றும் கூறப்படுகிறது.