இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இன பாம்பு
மொனராகலை அருகே உள்ள உயிரியல் ரீதியாக வளமான மரகல மலைத்தொடரில் இலங்கைக்கே உரித்தான ஒரு புதிய பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் உள்ள மொனராகலை நகரத்திலிருந்து 54 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடரில் இந்த புதிய வகை பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய பாம்பு, கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த டென்ட்ரெலாஃபிஸ் இனத்தைச் சேர்ந்தது. அத்துடன், உருவவியல் ரீதியாக விரி ஹால்டாண்டா உடன் மிகவும் ஒத்திருக்கும் இந்தப் புதிய இனத்திற்கு, நாட்டின் முன்னணி ஆராய்ச்சியாளரான தாசுன் அமரசிங்கவின் நினைவாக, தாசுன்ஸ் ப்ரோன்ஸ்பேக் என்றும், விலங்கியல் ரீதியாக டென்ட்ரெலாஃபிஸ் தாசுனி என்றும் ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் உள்ள மரகல மலையிலிருந்து சேகரிக்கப்பட்ட ஒற்றை பெண் மாதிரியிலிருந்து இந்தப் புதிய இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சிக் குழுவின் சமீரா சுரஞ்சன் கரனரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பு, இலங்கையின் தனித்துவமான புவிசார் மற்றும் உயிரியல் வளங்களை மேலும் விளக்கும் வகையில் முக்கியமாக கருதப்படுகின்றது.