இலங்கையில் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் புதிய திட்டம்
இலங்கையில் உலகப் புகழ்பெற்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவையான PayPal அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப பணிகள் மற்றும் தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்த சேவை நாட்டில் நிறுவப்படுவதால் இலங்கையின் டிஜிட்டல் தொழில் முனைவோர், தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் சுயதொழில் வல்லுநர்கள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
PayPal சேவை
வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் வருமானத்தை நேரடியாகவும், பாதுகாப்பாகவும், எளிதாகவும் இலங்கைக்கு மாற்றிக் கொள்ள முடியும் வகையில் முக்கிய தடைகள் நீங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த முன்னெடுப்பு மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலக சந்தையில் எளிதாக விற்பனை செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக நாட்டின் வெளிநாட்டு நாணய வருவாய் அதிகரிப்பதுடன், பாரம்பரிய மற்றும் தொழில்நுட்ப உற்பத்தித் துறைகளிலும் நேரடி வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கையில் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதிலும், நிதி தொழில்நுட்ப (FinTech) துறையில் புதுமைகளை வளர்ப்பதிலும் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.