அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய அமைச்சரின் எதிர்பார்ப்பு
நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அரச சேவையாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளோம் என விவசாயத்துறை மற்றும் கால்நடை அமைச்சர் கே.டி லால் காந்த தெரிவித்துள்ளார்.
விவசாயத்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளார்கள்.
எமது அரசாங்கத்தில் அனைத்து இன மக்களும் பங்காளர்களாகியுள்ளமை கட்சி என்ற ரீதியில் நாங்கள் பெற்றுக் கொண்ட மாபெரும் வெற்றியாகும். தேர்தல் பெறுபேற்றின் வெற்றியை காட்டிலும் அது அப்பாற்பட்டது.
அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் அபிலாசைகளை சிறந்த முறையில் நிறைவேற்றுவோம்.
பொருளாதார ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முறையான கொள்கை திட்டங்களுடன் தீர்வு காணப்படும். பெரும்போக விவசாயத்துக்கு தேவையான உரம் தடையின்றி விநியோகிக்கப்படும்.
அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் விவசாயிகளை வளப்படுத்த வேண்டும். தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்கு முறையான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க அரச சேவையாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாக எதிர்பார்த்துள்ளோம்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களை எம்மால் வெற்றிக் கொள்ள முடியும்.
பாரம்பரியமான அரசாங்கத்தை போன்று நாங்கள் செயற்படவில்லை. மக்களுடன் இருந்து மக்களுக்கான சேவையை முன்னெடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.