பாடசாலை மாணவர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் ; அரசின் புதிய நடவடிக்கை
இலங்கையில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளை முறைப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் புதிய சட்டதிட்டங்களைக் கொண்டு வருவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இன்று (9) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பிரதமர் ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால மற்றும் கல்வி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரைவு ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சேர்க்கப்பட வேண்டிய புதிய திருத்தங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, 'சிசு சரிய' பாடசாலைப் பேருந்து சேவையை முன்னரை விட அதிக வினைத்திறனுடனும், பயனுள்ள முறையிலும் நாடு முழுவதும் விரிவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துச் சேவைகளின் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுக்க முன்னுரிமை அளிக்கப்படும். மாணவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடுமையான சட்டதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
பாடசாலை வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் தொழில்முறைத் தரத்தை உயர்த்துவதன் மூலம், அவர்கள் பொறுப்புடனும் பொறுப்புக்கூறலுடனும் செயல்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த போக்குவரத்து அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
அதேநேரம், புதிய கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, மாணவர்களின் போக்குவரத்துத் தேவைகளை எவ்வித தடையுமின்றி பூர்த்தி செய்வதே இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.