உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விற்பனையைத் தடுக்கும் அதிக விலை
கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனைச் சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இறக்குமதி குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் சமீபத்தில் சுங்க வரிகளை உயர்த்தியதன் காரணமாகவே மொத்த விற்பனைச் சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் வெங்காயத்திற்கான சுங்க வரியை ஒரு கிலோவுக்கு ரூ.50 வரைக்கும் உயர்த்தியுள்ளது. உருளைக்கிழங்கிற்கான சுங்க வரியை ஒரு கிலோவுக்கு ரூ.80 வரைக்கும் உயர்த்தியுள்ளது.

தற்போது மொத்த விற்பனைச் சந்தையில், ஒரு கிலோ வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.170 முதல் ரூ.175 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தம்புள்ளை மற்றும் வெலிமடைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்யும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் தரம் (தரக்கட்டுப்பாடு) தொடர்பில் பிரச்சினை உள்ளது.
அத்துடன், உள்ளூர் உற்பத்தியின் விலை அதிகமாக இருப்பதால், அவை விற்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாகவும் பிரச்சினை நிலவுகிறது.
இந்த உள்ளூர் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான பிரச்சினை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன மேலும் வலியுறுத்தியுள்ளார்.