இனி மெசேஜ்களை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பலாம் ; வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் (WhatsApp), பயனர்களின் வசதிக்காகப் புதிய அம்சமொன்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த மெசேஜ்களைத் திட்டமிட்ட நேரத்தில் தானாக அனுப்பும் (Message Scheduling) வசதி, தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களில் சிலருக்குச் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வாட்ஸ்அப்பில் இனி குறுஞ்செய்திகள் (Messages) மற்றும் புகைப்படங்களை (Photos) நாம் விரும்பும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்கூட்டியே செடூல் செய்து வைத்துக்கொள்ள முடியும்.

புதிய வசதியின் முக்கிய சிறப்பம்சங்கள்
10 நிமிடங்கள் முதல் 2 வாரங்கள் வரை:
பரபரப்பான வேலைப் பளுவிற்கு மத்தியில் முக்கியமான வாழ்த்துகளையோ அல்லது அவசியமான தகவல்களையோ அனுப்ப மறந்துவிடுவோமே என்ற கவலை இனி தேவையில்லை. இந்த அம்சத்தின் மூலம் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சமாக 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களைத் துல்லியமாகச் செடூல் செய்து வைக்கலாம்.
இணைய இணைப்பு தேவையில்லை:
நாம் செடூல் செய்துவிட்ட குறிப்பிட்ட நேரத்தில் நமது செல்போனில் இணைய இணைப்பு (Internet Connection) இல்லாவிட்டாலும் கூட, மெசேஜ்கள் தானாகவே சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சென்று சேர்ந்துவிடும்.
சாட் மற்றும் குரூப்களில் பயன்பாடு:
தனிநபர் உரையாடல்கள் (Personal Chats) மற்றும் குழுக்களிலும் (Groups) இந்தச் செடூல் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மெட்டா நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.
ரத்து செய்யும் வசதி:
ஒருவேளை செடூல் செய்த மெசேஜை அனுப்ப வேண்டாம் என நினைத்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரம் வருவதற்குள் அதை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து அளிக்கவும் (Cancel & Delete) முடியும். WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் (Android Version 2.26.40.7) இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே, மிக விரைவில் அனைத்துப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.