எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசாங்கத்தின் புதிய முயற்சி ; விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் ரஷ்யாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ரஷ்யா மீதான சர்வதேச தடைகளின் தற்போதைய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, மே மாதம் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது இது தொடர்பான இறுதி முடிவுகள் எட்டப்படும் என கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள்
அவர் மேலும் குறிப்பிடுகையில், ரஷ்யாவிடமிருந்து சலுகை அடிப்படையில் எரிபொருளைப் பெறுவதை விட, நீண்ட கால அடிப்படையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றினைச் செய்துகொள்வது குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்ட சில தடைகள் ஒரு மாத காலத்திற்கு நீக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலக்கெடு முடிவடையவுள்ளது.
இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்த்து, அதற்கேற்ப அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும். மேலும், ரஷ்யாவுடனான இந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர நான் மே மாதம் நேரில் செல்லவிருக்கின்றேன்.
பெலாரஸ் நாட்டிற்கு மேற்கொள்ளும் பயணத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவுக்கும் சென்று, எரிபொருள் விநியோகம் தொடர்பான அதிகாரப்பூர்வ இணக்கப்பாடுகளை எட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அரசாங்கம் முன்னெடுத்து வரும் இராஜதந்திர முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கின்றோம் என்றார்.