தொடருந்து சேவையில் ஏற்படவுள்ள புதிய விருத்தி
தொடருந்து தாமதங்களைத் தடுப்பதற்காக, நாளாந்தம் சேர்க்கப்படும் புகையிரத இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், தொடருந்து சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
எல்ல பகுதிக்கு விஜயம் செய்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மின்சார தொடருந்துகள்
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“மின்சார தொடருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இலங்கையில் தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்படும் செயற்பாட்டுக்கு தீர்வு காணப்பட வேண்டும். தினமும் சுமார் 217 முதல் 220 தொடருந்து சேவைகள் உள்ளன. கடந்த முறை அவற்றில் சுமார் 17, 18 அல்லது 20 சேவைகள் இரத்து செய்யப்பட்டன.தொடருந்து சேவைகள் இரத்துச் செய்வதை நிறுத்த நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
தொடருந்து இயந்திரங்களை இயங்க வைக்கும் வகையில் வைத்துக்கொள்வதுதான் இதற்கான ஒரே வழி. சராசரியாக, இலங்கைக்கு நாளாந்த செயல்பாடுகளுக்காக சுமார் 60 முதல் 70 தொடருந்து இயந்திரங்கள் தேவைப்படுகின்றன.
ஆனால் கடந்த காலத்தில், சுமார் 45 அல்லது 50 இயந்திரங்களே செயற்பாட்டில் இருந்தன. இதை அதிகரிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.அந்த செயற்பாடு வெற்றி பெற்று வருகிறது. பெப்ரவரி மாத இறுதிக்குள், நாளாந்த செயல்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் எண்ணிக்கையை 60இற்கும் அதிகமாக பயன்படுத்த நினைக்கிறோம்.
இலங்கையில் இயக்கப்படும் தொடருந்துகளில் சுமார் 52% வீதமானவை நாளாந்தம் இயக்கப்படுகின்றன. 17% வீதமானவை 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருகின்றன. 10% வீதமானவை 30 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வருகின்றன. இந்த சேவையின் தரத்தை மேம்படுத்த, ரயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டும். இதற்காக நாங்கள் அதிக அவதானம் செலுத்தியுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.