மருத்துவ சேவையில் புதிய மாற்றம் ; குடும்ப வைத்தியரின் பரிந்துரை அவசியம்
அடுத்த வருடம் முதல் நாடளாவிய ரீதியில் 1,000 ‘ஆரோக்யா’ (Arogya) மையங்கள் மூலம் குடும்பங்களுக்கு முதன்மைப் பராமரிப்பு வைத்தியரை அணுகும் வசதி ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

நோயாளர்கள் தாங்கள் விரும்பிய வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் முறைக்குப் பதிலாக, தங்களது குடும்ப வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச் செல்லும் முறைமை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் வருடாந்தம் சுமார் 80 மில்லியன் பேர் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் 22 மில்லியனாக இருக்கும் நிலையில், ஒருவர் சராசரியாக நான்கு தடவைகள் வைத்தியசாலைகளுக்குச் செல்வதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நோயாளர்களே எந்த வைத்தியரைச் சந்திப்பது, எந்த வைத்தியசாலைக்குச் செல்வது என்பதைத் தீர்மானிக்கும் தற்போதைய நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதன்மை மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் நோயாளர்கள் பிரதான வைத்தியசாலைகளுக்குச் செல்லும் வகையில் புதிய சுகாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேவையற்ற வகையில் மருந்துகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளாமல் இடைநடுவில் நிறுத்துவது மருந்து விரயத்துக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.