உள்நாட்டு உற்பத்திகள் தொடர்பில் கையெழுத்தான உடன்படிக்கைகள் ; வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை
நுகர்வோருக்குத் தரமான உள்நாட்டு உற்பத்திகளை நேரடியாக வழங்கும் நோக்கில், லங்கா சீனி நிறுவனம் மற்றும் பி.சி.சி. லங்கா நிறுவனம் ஆகியவற்றுடன் இரண்டு விசேட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வரலாற்றில் இதுவொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படும் நிலையில், இப் புதிய திட்டத்தின்கீழ் லங்கா சீனி நிறுவனத்திடமிருந்து மாதமொன்றிற்கு 1,000 டொன் சிவப்பு சீனியும், பி.சி.சி. லங்கா நிறுவனத்திடமிருந்து பொதி செய்யப்பட்ட 20,000 லீட்டர் தேங்காயெண்ணெய், சோப் உள்ளிட்ட ஏனைய உற்பத்திகளும் கூட்டுறவு விநியோகச் சங்கிலிக்கு பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

விநியோக வலையமைப்பு
இப்பொருட்கள் 75 நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஊடாகச் செயற்படும் 3,500 பிரதேச விற்பனை நிலையங்களைக் கொண்ட பரந்த விநியோக வலையமைப்பின் மூலம் மக்களுக்குச் சென்றடையவுள்ளன.
இடைத்தரகர்களை அகற்றி, சந்தை விலையைக் கட்டுப்படுத்துவதுடன் விலையைச் சமநிலைப்படுத்தும் காரணியாக இத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2029 ஆம் ஆண்டளவில் இப் பிரதேச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 3,500 இலிருந்து 10,000 ஆக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும், உள்நாட்டு உற்பத்திகளுக்கு மேலதிகமாக இந்தியக் கூட்டுறவுச் சங்கங்களுடன் இணைந்து தரமான பொருட்களை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.