இலங்கை சுற்றுலா துறையில் புதிய சாதனை
இலங்கை சுற்றுலாத்துறையானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை எட்டியுள்ளது.
கடந்த மே மாதத்தில் மாத்திரம் 145,745 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
மே மாதமொன்றில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை இதுவாகும்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகளின்படி, 132,919 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்த 2025 ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 9.6 சதவீத வளர்ச்சியாகும்.
இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அங்கிருந்து 60,342 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய இராச்சியம் (9,248), சீனா (9,156), ஜெர்மனி (6,734) மற்றும் அவுஸ்திரேலியா (6,414) ஆகிய நாடுகள் தரவரிசையில் முன்னிலையில் உள்ளன.
இந்த வரலாற்றுச் சாதனையானது சுற்றுலாத்துறையின் திருப்புமுனை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெறும் 1,497 சுற்றுலாப் பயணிகளே வந்திருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த விரைவான மீட்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.