நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் ; நட்டஈடு க்கு அமைச்சரவை ஒப்புதல்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட இழப்பீடு மற்றும் சலுகைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கான இழப்பீடுகள் மற்றும் சலுகைகளைப் பரிந்துரைப்பதற்காக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் தலைமையில் கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழு சமர்ப்பித்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொது நிர்வாகச் சுற்றறிக்கை இலக்கம் 22/93 இன் கீழ் வழங்கப்படும் இழப்பீட்டுக்கு மேலதிகமாக விசேட இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, உயிரிழந்த அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
முழுமையான இயலாமைக்கு உள்ளான அதிகாரிகளுக்கும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
அதேவேளை, பகுதியளவிலான இயலாமையால் வருமானம் ஈட்டும் திறனை 100 சதவீதம் இழந்த அதிகாரிகளுக்கு 40 இலட்சம் ரூபாயும், தற்காலிக பகுதியளவிலான இயலாமைக்கு உள்ளான அதிகாரிகளுக்கு 30 இலட்சம் ரூபாயும் வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலை தந்திரோபாயப் படைக்கு சட்டபூர்வ அந்தஸ்து வழங்கும் வகையில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், குறித்த படைக்கு போதியளவு தகுதியான அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல், அவர்களுக்கு முறையான துறைசார் பயிற்சிகளை வழங்குதல், நவீன உபகரணங்களை வழங்குதல் மற்றும் படைக்கான தலைமையகத்தைப் பொருத்தமான இடத்தில் அமைத்தல் ஆகிய பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.