காணமல் போன துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் கைது
2021ஆம் ஆண்டு அரசாங்க ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்து காணாமல் போன T56 ரக துப்பாக்கியுடன் கடற்படை சிப்பாய் ஒருவர் குளியாப்பிட்டிய இலுக்கேன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் கடற்படை தலைமையக அதிகாரிகள் குழுவினால் இன்று (16) காலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
T56 ரக துப்பாக்கி
2021 ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகம், ரங்கல முகாமில் இணைக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்துள்ள நிலையில், அந்த நேரத்தில் குறித்த T56 ரக துப்பாக்கி காணாமல் போயிருந்தது.
அதன்படி, இலுக்கேனவில் உள்ள கல்பொல ஜனபத பகுதியைச் சேர்ந்த, குறித்த கடற்படை சிப்பாயின் வீட்டில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர், வெலிசறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்த பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார்.