மட்டு. மாங்காடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் வெகுசிறப்பாக இடம்பெறும் நவராத்திரி பூஜைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மாங்காடு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நவராத்திரி பூஜைகள் சிறப்பாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
நவராத்திரி விழாவை முன்னிட்டு இந்து ஆலயங்களிலும், பாடசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிலும் பூஜை நிகழ்வுகள் மிகவும் சிறப்பான முறையில் தொடர்ந்து ஒன்பது நாட்களும் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து ஒன்பது நாட்களும் பூஜை
அந்தவகையில் ஆலயத்தின் மூலமூர்த்தியான மாணிக்கப் பிள்ளையாருக்கு பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் விசேடமாக கொலு அமைக்கப்பட்டிருப்பதோடு, இஸ்மானத்தில் நவராத்திரி பூஜைகள் முப்பெரும் தேவிகளுக்கு இடம்பெறுகின்றன.
நவராத்திரி என்பது ஒன்பது இரவுகள் என்று பொருள்படுகின்றன. அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும், நவராத்திரி எனப்படுகிறது. சந்திர சுழற்சியின் முதல் ஒன்பது நாட்கள் பெண் தன்மையாக கருதப்படுகின்றன.
இவை பெண் தெய்வங்களுக்கு மிகச் சிறப்பான காலமாகவும் நோக்கப்படுகின்றன.
இந்த ஒன்பது நாட்களிலும் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாட்கள் இலக்குமிக்கும், இறுதி மூன்று நாட்கள் கல்வித் தெய்வமான சரஸ்வதிக்கும் பூஜைகள் இடம்பெற்று, பத்தாம் நாள் விஜயதசமியன்று ஆயுத பூஜை, ஏடு தொடக்குதலுடன் நவராத்திரி விழா நிறைவு பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.