பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் தொடர்பில் நாசா வெளியிட்ட புதிய தகவல்
பூமியை தாக்க இருப்பதாக சொல்லப்படும் 2024 YR4 எனும் விண்கல் குறித்து நாசா தற்போது புதிய தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறது.
நேற்று வரை இந்த கல் பூமியை தாக்க 3.1% வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இந்த வாய்ப்பு தற்போது குறைந்திருக்கிறது.
அதாவது 3.1 சதவிகிதத்திலிருந்து 1.5 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது விண்கல் பூமி மீது மோத 67ல் 1 என்கிற அளவில்தான் வாய்ப்பு இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சிலியில் உள்ள விண்வெளி ஆய்வகத்தில் இருந்து இந்த விண்கல் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. விண்கற்கள் சூரியக் குடும்பத்தின் எல்லையில் இருக்கின்றன.
அவை சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை நோக்கி வரும் பொழுது பூமி போன்ற கிரகங்கள் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், பூமிக்கு முன்னதாக வியாழன் கிரகம் இருக்கிறது.
இது அளவில் பெரியது, ஈர்ப்பு விசையும் அதிகம். எனவே பூமியை நோக்கி வரும் பெரும்பாலான விண்கற்களை இந்த கிரகம் தனக்குள் ஈர்த்துக் கொள்கிறது. இருப்பினும் சில விண்கற்கள் இந்த ஈர்ப்பு விசையை தாண்டி சூரியனை நோக்கி வருகின்றன.
அப்படியான விண்கற்களை நியர் எர்த் ஆப்ஜெக்ட்(NEO) என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த வகை விண்கற்கள் பூமி மீது மோதுவதற்கு அதிகமான வாய்ப்பு இருப்பதாக அறியப்படுகிறது.
எனவே பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கற்கள் அனைத்தையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 விண்கல் சூரியனை ஒரு ரவுண்டு சுத்தி விட்டு மீண்டும் சூரிய குடும்பத்தின் எல்லைக்கு சென்று கொண்டிருக்கிறது.
இது 2032ஆம் ஆண்டு மீண்டும் திரும்பி வரும்பொழுது பூமி மீது மோதுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நாசா எச்சரித்து இருந்தது.
கடந்த 19ஆம் திகதி நாசா தனது எக்ஸ் தளத்தில், இந்த விண்கல் பூமி மீது மோத 32 இல் 1 வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தது. அதாவது 3.1 சதவீத வாய்ப்பு. இந்நிலையில் தற்போது இந்த வாய்ப்பு 67ல் 1 என, அதாவது 1.5 சதவீதமாக குறைந்து இருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாசாவுடன் சேர்ந்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் இதனை உறுதி செய்து இருக்கிறது. இந்த வாய்ப்புகள் இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பூஜ்ஜியத்தை தொட்டால் பூமி பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து விடும்.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோள் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவரான ரிச்சர்ட் மொய்சல் இது குறித்து கூறுகையில், "விண்கல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
ஆனால் இதனை உறுதி செய்ய இன்னும் கூடுதலான ஆய்வுகள் தேவைப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
மற்ற விஞ்ஞானிகளும் விண்கல் குறித்த ஆய்வை தீவிரப்படுத்த முயன்று வருகின்றனர். எனவே அடுத்த மாதம் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்கலை நோக்கி திருப்ப இருக்கின்றனர்.
இந்த சக்தி வாய்ந்து தொலைநோக்கியை கொண்டு ஆய்வு செய்வதன் மூலம் விண்கல் பூமியை தாக்குவதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது துல்லியமாக தெரிந்து விடும்.
பூமியை தாக்கவில்லை என்றாலும் கூட சந்திரனை தாக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் இப்போதைக்கு குட் நியூஸ் தெரிவித்திருக்கிறார்கள்.