செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் ; நாசா கண்டுபிடித்த புதிய தகவல்
செவ்வாய் கிரகத்தில் பண்டையகால உயிரினத்தின் தடையம் கிடைத்துள்ளது என நாசா அறிவித்துள்ளதாக சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் ( Nasa's Rover), செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு வறண்ட நதிப் படுகையில் பண்டையகால நுண்ணுயிரிகளின் வாழ்க்கைத் தடயங்கள் இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியமான அறிகுறிகளைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த ஆய்வில் நேரடியாக ஈடுபடாத விஞ்ஞானிகளான ஜேனிஸ் பிஷப் (SETI Institute) மற்றும் மாரியோ பேரென்டே (University of Massachusetts Amherst) ஆகியோர், உயிரினங்கள் அல்லாத பிற இயற்கையான செயல்முறைகளும் இந்த நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பெர்சவரன்ஸ் ரோவர் 2021 ஆம் ஆண்டு முதல் செவ்வாயில் சுற்றி வருகின்றது.
இதனால் நேரடியாக உயிரினங்களைக் கண்டறிய முடியாது என்பதால் அதற்குப் பதிலாக, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் பொருத்தமான இடங்களாகக் கருதப்படும் பாறைகளில் துளையிட்டு, மாதிரிகளைச் சேகரிக்கின்றது.
இந்தநிலையில், ஜோயல் ஹுரோவிட்ஸ் (Stony Brook University) தலைமையிலான குழுவினர், நெரெட்வா வால்லிஸ் (Neretva Vallis) என்ற நதிப் படுகையில் உள்ள பிரைட் ஏஞ்சல் (Bright Angel) என அழைக்கப்படும் பாறை அமைப்பில் இருந்து இந்த மாதிரியை சேகரித்துள்ளனர்.
இந்த மாதிரியில் உயிரினங்கள் உருவாவதற்குத் தேவையான கரிம கார்பன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இரும்பு பாஸ்பேட் மற்றும் இரும்பு சல்பைட் நிறைந்த சிறிய புள்ளிகளும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில், நுண்ணுயிரிகள் கரிமப் பொருளை உண்ணும்போது இந்த இரசாயன கலவைகள் துணை விளைபொருட்களாக உருவாகின்றன.
இது உயிரினங்கள் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் என உடனடியாக கூற முடியாது எனவும் நுண்ணுயிர் வாழ்க்கைக்கு சாத்தியமான விளக்கம் மட்டுமே என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாம் காணும் அம்சங்களை உருவாக்க வேறு வழிகளும் இருக்கக்கூடும் என்று முன்னணி ஆராய்ச்சியாளரான ஜோயல் ஹுரோவிட்ஸ் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரையிலான தேடல்களில், பண்டைய கால வாழ்க்கையின் அறிகுறிகளுக்கான மிகவும் உறுதியான மற்றும் வலுவான ஆதாரம் இதுதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த விஞ்ஞானி ஜோயல் ஹுரோவிட்ஸ், உயிரினங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், வேறு சில இயற்கை நிகழ்வுகளாலும் இது ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.