இலங்கை அரசியலை அதிர வைத்த நாமலின் கைது ; வழக்கின் முழு பின்னணி
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்த பின்னரே அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

விசாரணைகள்
2013 ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 விமானங்களை கொள்வனவு செய்த போது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக அன்றைய ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியான நியோமாலி விஜேநாயக்க ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
அது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன கடந்த மே மாதம் 08 ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்திருந்த நிலையில், அது தற்கொலை என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

விமானக் கொள்வனவு தொடர்பிலான விசாரணைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பின்னணியில், இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, இன்று (04) முற்பகல் 9.15 மணியளவில் நாமல் ராஜபக்ஷ குறித்த ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.
சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். அதன்படி, கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அந்த சந்தர்ப்பத்தில் பல அரசியல் பிரதிநிதிகளும் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அங்கு சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவைக் கைது செய்தது தொடர்பில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவும் இணைந்து மேற்கொண்ட கூட்டு விசாரணையின் விளைவாகவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார்.