ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் அதிகமான இழப்பீடு
கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த இழப்பீட்டுத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அத்தொகை கொழும்பிலுள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரகப் பிரிவு ஊடாக உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓமானிலுள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கம்பனிகள் மற்றும் அதிகாரிகளுடன் இலங்கைத் தூதரகம் நடத்திய தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் ஒருங்கிணைப்புகள் காரணமாகவே இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது.
ஓமானில் பணியாற்றியபோது உயிரிழந்த ஏனைய இலங்கையர்களுக்காகக் கிடைக்கவேண்டிய நிலுவை இழப்பீட்டுத் தொகைகளை அறவிடும் நடவடிக்கைகளுக்காகவும் தூதரகம் தொடர்ந்து தீவிரமாகத் தலையிடும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.